கண் இமை துடித்தால் ஊட்டச்சத்துக் குறைபாடாக இருக்கலாம்! – மருத்துவ உலகம் கூறும் உண்மைகள்

 

கண் இமை துடித்தால் ஊட்டச்சத்துக் குறைபாடாக இருக்கலாம்! – மருத்துவ உலகம் கூறும் உண்மைகள்

கண் இமை துடித்தால் சிலர் நல்லதா, கெட்டதா என்று பார்ப்பார்கள். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது, அதுவே பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது என்று விதவிதமான நம்பிக்கைகள் நம் ஊரில் உள்ளது. ஆனால், இது ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது விஞ்ஞானம். கண் இமை மட்டும் துடிப்பதை மயோசீமியா (Myokymia) என்று அழைக்கிறது மருத்துவ உலகம். கண் இமை துடிப்பதற்கு அறிவியல் உலகம் கூறும் காரணங்களைத் தெரிந்துகொள்வோம்!

கண் இமை துடித்தால் ஊட்டச்சத்துக் குறைபாடாக இருக்கலாம்! – மருத்துவ உலகம் கூறும் உண்மைகள்

கண் இமை அது மேல் இமை அல்லது கீழ் இமை எதுவாக இருந்தால் இமை துடிப்பதற்கு மன அழுத்தம், சோர்வு, கண்களில் சிரமம், அதிக காஃபின், ஆல்கஹால் அருந்தியது, கண்களில் நீர் வறட்சி, ஊட்டச்சத்து குறைபாடு, ஒவ்வாமை ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக மன அழுத்தம் அதிகரித்தவர்களுக்கே இந்த கண் துடித்தல் பிரச்னை வருவதாக தெரிவிக்கின்றனர். மன அழுத்தத்தைக் குறைக்க யோக, தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது, நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றைப் பின்பற்றினாலே கண் இமை துடித்தல் பிரச்னை சரியாகிவிடுமாம்.

சரியாக தூக்கமின்மை, மன அழுத்தம், மனக் கவலை ஆகியவை கண்களில்தான் பிரதிபலிக்கும். எனவே, குறைந்தது 7-8 மணி நேரம் தூங்கி எழுந்திருக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.

நீண்ட நேரம் மொபைல், கம்ப்யூட்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் கண்கள் மற்றும் இமை தசைகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. இதன் காரணமாக கண் இமை துடிக்கலாம் என்கின்றனர். இதைத் தடுக்க 20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை ஒளிர் திரையில் இருந்து வேறு பக்கம் திருப்ப வேண்டும். கண்களை 20 விநாடிகளுக்கு மூடி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

சிலருக்கு கண்ணீர் சுரப்பியில் பிரச்னை இருக்கலாம். கண்ணீர் போதுமான அளவில் இல்லாதபோது கண்களில் எரிச்சல் ஏற்படும். இது நாளடைவில் கண் இமை துடித்தல் போன்ற பிரச்னை ஏற்படுத்தலாம்.

போதுமான ஊட்டச்சத்து பற்றாக்குறை கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர். மக்னீஷியம் பற்றாக்குறை கண் இமை துடித்தல் பிரச்னை ஏற்படுத்துமாம். எனவே, சரிவிகித ஊட்டச்சத்து உணவைப் பின்பற்றினால் இதைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.

எப்போதாவது கண் இமை துடித்தல், ஒரு பக்கமாக இழுப்பது போல உணர்ந்தால் பிரச்னை இல்லை. இது நீண்ட நாட்களாக நீடித்தால் அது கண் – நரம்பியல் பிரச்னையாக இருக்கலாம். எனவே கண் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று எதனால் கண் இமை துடிக்கிறது என்று கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.