கர்நாடகா: குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட மிகவும் அரிய வகை அல்பினோ மலைப்பாம்பு

 

கர்நாடகா: குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட மிகவும் அரிய வகை அல்பினோ மலைப்பாம்பு

பன்ட்வால்: கர்நாடகாவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மிகவும் அரிய வகை அல்பினோ பாம்பு பிடிபட்டது.

கர்நாடகாவின் பன்ட்வாலில் உள்ள குடியிருப்புக்குள் மிகவும் அரிதான வெள்ளை நிற அல்பினோ வகை மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மலைப்பாம்பு குறித்து உள்ளூர்வாசிகள் பாம்பு பிடிக்கும் நபரான கிரணுக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரண் ஒரு வீட்டிற்குள் இருந்த அல்பினோ பாம்பை லாவகமாக கையால் பிடித்து தூக்கினார். இதையடுத்து அந்த மலைப்பாம்பை வன அலுவலர்களிடம் கிரண் ஒப்படைத்தார். இந்த மலைப்பாம்பு மங்களூருவிலுள்ள பிலிகுலா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளது.

அந்த அல்பினோ பாம்பு அங்கிருந்த உள்ளூர் மக்களுக்கோ அல்லது அது கண்டுபிடிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கோ எந்தத் தீங்கும் செய்யவில்லை. இந்த அல்பினோ மலைப்பாம்பின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. வெள்ளை அல்பினோ மலைப்பாம்புகள் மிகவும் அரிதானவை மற்றும் அவை விஷமற்றவை. ஆனால் அவற்றை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் இவை இரையை சுற்றி வளைத்து நெருக்கினால் எலும்புகள் நொறுங்கி விடும். இந்த வகை பாம்புகள் ஆப்பிரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.