சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டி!

 

சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டி!

புதிதாக கட்சி தொடங்கி அதை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் அரசியல் களம் காண்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் எங்கு சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு அழைக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை நான் இப்போது ஏற்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் களம் காண்போம் என்று அதிரடியாக பேசியிருந்தார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.

சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டி!

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், தமிழக இளைஞர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள். இதற்காக 2016ல் பேரணி கூட நடத்தினார்கள். அப்போது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நான், நாட்டின் ஏழை மக்களுக்காக உழைக்க விரும்பி அந்த பணியை தொடர்ந்தேன். ஆனால் என்னை தொடர்ந்து வற்புறுத்தியதால், அரசியலுக்கு வந்தேன். 2020ல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் மாற்றத்துக்கு பதில் சமூக மாற்றத்தை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய காலம் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான காலம். புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் எங்களது கட்சி இணைந்து போட்டியிடும். தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த இரண்டு கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள் என்றும் கூறினார்.