உயர் ரத்த அழுத்தம்… அறிகுறிகள் அறிவோம்!

 

உயர் ரத்த அழுத்தம்… அறிகுறிகள் அறிவோம்!

30, 35 வயதைத் தாண்டிவிட்டாலே பி.பி, சுகர் இருக்கா என்று கேட்கத் தொடங்கிவிடுகின்றனர். பி.பி அல்லது ரத்த கொதிப்பு என்று சொல்லப்படும் உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ரத்த அழுத்தம் என்பது நம்முடைய இதயம் சுருங்கி, விரியும்போது ரத்தம் பாயும் வேகத்தைக் கணக்கிடுவதாகும். இதயம் சுருங்கும் போது 120 சிஸ்டாலிக் என்ற அளவிலும் விரிவடையும் போது 80 டயஸ்டாலிக் என்ற அளவிலும் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டிச் சென்றால் அது உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம்… அறிகுறிகள் அறிவோம்!

இதயம் சுருங்கும்போது உடல் முழுக்க ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த அழுத்தம் அதிகரிக்கும் போது சிறிய ரத்தக் குழாய்கள் பாதிப்பைச் சந்திக்கின்றன. இதன் காரணமாக இதய நோய், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு சில நாட்களில் மாறிவிடுவது இல்லை. பல ஆண்டுகளாக நடைபெறும் மாற்றத்தின் இறுதிதான் உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் என அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கும். எனவே தான் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அதைக் கட்டுக்குள் வைக்க வழிகாண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.

உயர் ரத்த அழுத்தம் அறிகுறிகள்

ஏற்கனவே சொன்னது போல ஆரம்ப நிலையில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் தென்படாது. தீவிரமாக மாறும்போது,

தலைவலி,

சுவாசப் பிரச்னை, மூச்சுத் திணறல்

மூக்கில் ரத்தம் கசிதல்

தலைச்சுற்றல்

நெஞ்சுவலி

பார்வைத் திறனில் கோளாறு

சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்

போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அஜாக்கிரதையாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் உயிரைப் பறித்துவிடும்.

ரத்த அழுத்தம் எவ்வளவு என்பதைக் கண்டறிவது மிகப்பெரிய கஷ்டமான காரியம் இல்லை. தற்போது மருத்துவமனைக்குச் சென்றாலே மருத்துவரைச் சந்திப்பதற்கு முன்னதாக உயரம், எடை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு விடுகின்றன.

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு வந்த பிறகு சிகிச்சை பெற செல்வதற்கு பதில், குடும்பத்தில் குறிப்பாக அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் பிரச்னை இருந்தால் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று உயர் ரத்த அழுத்தம் பிரச்னை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்!

உயர் ரத்த அழுத்தம் நிலைகள்

ஆரோக்கியம்: 120/80 மில்லிமீட்டர்ஸ் ஆஃப் மெர்க்குரி (மி.மி எச்.ஜி) என்ற அளவில் இருப்பது ஆரோக்கியமானது.

சற்று அதிகம்: 120 முதல் 129 மி.மி எச்.ஜி என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்தால் சற்று அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

ஸ்டேஜ் 1 உயர் ரத்த அழுத்தம்: சிஸ்டாலிக் 130 முதல் 140 மி.மி எச்.ஜி என்ற அளவில் டயஸ்டாலிக் 80 முதல் 89 என்ற அளவிலும் இருந்தால் அது ஸ்டேஜ் 1 உயர் ரத்த அழுத்தம் ஆகும். இந்த நிலைக்கு எல்லாம் மாத்திரை மருந்து, கட்டுப்பாடு அவசியம்.

ஸ்டேஜ் 2: சிஸ்டாலிக் 140 மற்றும் அதற்கு மேலும், டயஸ்டாலிக் 90க்கு மேலும் இருந்தால் அது இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தப் பாதிப்பாகும்.

ஆபத்தான நிலை: 180 மி.மி எச்.ஜி என்ற அளவுக்கு மேல் இருந்தால் அது அபாயகரமான ஆபத்தான நிலை என்று அர்த்தம்.