“கோவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை” – ஆட்சியர் சமீரன்

 

“கோவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை” – ஆட்சியர் சமீரன்

கோவை

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியர் சமீரன், மருத்துவமனையில் புதிதாக கட்டி வரும் கட்டிடங்களை பார்வையிட்டும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் மே மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000-க்கும் அதிகமாக, 38 சதவீதம் இருந்தது என்றும், தொடர்ந்து எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையால் தற்போது தொற்று 13 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் கூறினார்.

“கோவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை” – ஆட்சியர் சமீரன்

மேலும், நகரம், பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் தொடர்ந்து வீடு வீடாக சென்று தொற்று உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஆட்சியர் சமீரன், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முக கவசம் அணியாமலும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீதான நடவடிக்கை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், கருப்பு பூஞ்சை நோயால் இறந்தவரகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என கூறிய ஆட்சியர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் 500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.