கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

 

கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

ஈரோடு

கொரோனா கட்டுப்பாடுகளால் வெளி மாநில வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தேர்தலையொட்டி, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், கடந்த 2 மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது.

ஒரு வழியாக தேர்தல் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், கோடை கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பால், வெளி மாநில வியாபாரிகள் வருகை அடியோடு குறைந்தது.

கொரோனா பரவல் எதிரொலி – ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

இதனால், மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது. ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகளால் சில்லரை வியாபாரம் மட்டும் 25 சதவீதம் நடந்தாக ஜவுளி சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற 6ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:- “தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மொத்த ஜவுளி வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டிருந்தது. கோடை காலம் என்பதால் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கொரோனா 2-ஆம் அலை காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன”.

“இதனால் சில்லறை வியாபாரம் பெயரளவுக்கு மட்டுமே நடந்து வருகிறது. மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என அவர்கள் கூறினர்.