வேளாண் சட்டத்திற்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

 

வேளாண் சட்டத்திற்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

ஈரோடு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அடுத்த பழனிக்கவுண்டன் பாளையம், பாம்பகவுண்டன் பாளையம், சாணார் பாளையம், சோளங்கா பாளையம், கிளாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாயிகள் தங்களது வீடுகளிலும், விளை நிலங்களிலும் கருப்பு கொடிகளை ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், கையில் கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

இந்த போராட்டத்தின் போது பேசிய விவசாயிகள், போராட்ட களத்திற்கு டெல்லி செல்ல முடியாததால் வேளாண் சட்டத்தை எதிர்த்து அவரவர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருப்பதாகவும், விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறும் பிரதமர் விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினா். மேலும், மத்திய அரசிற்கு துணைபோகும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு ஏற்கனவே கட்டுபடி ஆகாத விலை உள்ள நிலையில், இதுபோன்ற சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.