ஈரோட்டில் உணவகம் உள்பட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

 

ஈரோட்டில் உணவகம் உள்பட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத உணவகம் உள்ளிட்ட 4 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு மாநகர் பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வதையடுத்து, மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடைகள், வணிக நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, கடைகளுக்கு அபராதமும், பூட்டி சீல் வைத்தும் வருகின்றனர்.

அதன்படி, இன்று ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள், 2ஆம் மண்டலத்துக்கு உட்பட்ட ஈரோடு பேருந்து நிலையம், நாச்சியப்பா வீதி, மேட்டூர் ரோடு, சத்திரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஒரு உணவகம் மற்றும் 3 தேநீர் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

ஈரோட்டில் உணவகம் உள்பட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

இதேபோல், சமூக இடைவெளியை கடை பிடிக்காததாக டாஸ்மாக் கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், ஒரு மளிகை கடையில் இருந்து தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதேபோன்று, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மற்ற 3 மண்டலங்களிலும் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், சுகாதார ஆய்வாளர் கண்ணன், உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.