மக்கள் குறை தீர்க்கும் நாளில் வெறிச்சோடிய ஈரோடு கலெக்டர் அலுவலகம்

 

மக்கள் குறை தீர்க்கும் நாளில் வெறிச்சோடிய ஈரோடு கலெக்டர் அலுவலகம்

கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி வந்தனர்.
இதனால் திங்கட்கிழமை அன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக பரபரப்பாக காட்சியளிக்கும்.

மக்கள் குறை தீர்க்கும் நாளில் வெறிச்சோடிய ஈரோடு கலெக்டர் அலுவலகம்

பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் என எப்போது பார்த்தாலும் பரபரப்பாக இருக்கும்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அவர்கள் நடவடிக்கையை கண்காணிக்கவும் சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க வரும் மக்களை கலெக்டர் சந்திப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் மக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

File:Erode District Collector's Office.jpg - Wikimedia Commons

இதனால் கடந்த சில நாட்களாகவே திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆனால் இன்று காலையிலிருந்து மதியம் வரை மக்கள் கூட்டம் இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஏதோ பேருக்கு சில பேர் வந்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்.