ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

 

ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

டி.வி விவாதத்தில் பிரதமர் மோடியைப் பற்றி தவறாக பேசிய ஜோதிமணி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து எடப்பாடியிடம் கூறியபோது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது புகார் பட்டியலை பா.ஜ.க தலைவர்கள் வாசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி, “நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் கொதிநிலையில் உள்ளனர். எங்களைப் போன்றவர்கள் களப்பணியும் சொந்த நிதியும்தான் அவர்கள் கோபத்தை தணித்துக்கொண்டிருக்கிறது. இல்லை என்றால் கோபத்தில் இருக்கும் மக்கள் இந்த அரசையும் பிரதமரையும் கல்லால் அடித்தே விரட்டுவார்கள்” என்றார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிவிட்டார் என்று பா.ஜ.க-வினர் கொந்தளிக்கத் தொடங்கினர். பா.ஜ.க தலைவர் கரு.நாகராஜன் மிக ஆபாசமாக பேசினார். ஜோதிமணியின் நடத்தைப் பற்றி எல்லாம் கரு.நாகராஜன் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!
கரு.நாகராஜன் பேசியது சரிதான் என்ற வகையில் பா.ஜ.க-வின் எச்.ராஜா, வானதி ஶ்ரீனிவாசன் என பலரும் கூறிவருகின்றனர். மேலும், ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர்கள் தமிழக முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஆனால், அவர் இதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஜோதிமணியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க கருதுகிறது. ஜோதிமணி மீது நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசுக்கு எதிரான கொந்தளிப்பு உருவாகிவிடும் என்று அரசு கருதுகிறது. இதனால், கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
இனி தமிழக அரசை நம்பினால் பலன் இல்லை என்று நினைத்த பா.ஜ.க தலைவர்கள் இது குறித்து மோடி, அமித்ஷா, நட்டாவுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். மேலும், தமிழக பா.ஜ.க சார்பில் கூறப்படும் விஷயங்களை தமிழக அரசு தட்டிக்கழித்து வருகிறது, அதன் போக்கு சரியில்லை என்ற வகையில் புகார் வாசித்து வருகின்றனர். அதனால், மேலிடத்திலிருந்து விரைவில் அழுத்தம் வரும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் பா.ஜ.க-வினர். நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முதலில் பா.ஜ.க-வினர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்… இது புரியாமல் மிரட்டல் விடுத்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.