இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்- 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்- 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் வரலாற்று வெற்றியை கோலி தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது. 1971க்குப் பிறகு ஓவல் மைதானத்தில் வெற்றி வாகை சூடி இந்தியா வரலாறு படைத்துள்ளது.

Image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து 290 ரன்களில் ஆல் அவுட் ஆனது.மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அபார சதத்தால் 466 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி முதல் விக்கெட்க்கு 100 ரன்களை சேர்த்தது.

அபாரமாக ஆடிய ரோரி பர்ன்ஸ்- ஹமீது ஜோடியை இந்தியாவின் சர்குல் தாகூர் பிரித்தார். அபாரமாக ஆடி வந்த ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹமீதை 63 ரன்களில் ஜடேஜா வெளியேற்றினார். இதன்பின் வந்த வீரர்கள் மளமளவென தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். திறமையான பேட்ஸ்மேனான ஜோ ரூட்டை 36 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் சர்குல் தாகூர்.

Image

92.2 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவு 3 விக்கெட்டுகளையும், பும்ரா, சர்குல் தாகூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆகையால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.