3வது-டெஸ்ட் : மீண்டும் ஃபார்முக்கு வந்த புஜாரா,கோலி

 

3வது-டெஸ்ட் : மீண்டும் ஃபார்முக்கு வந்த புஜாரா,கோலி

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 40.4 ஓவர்களில் 78 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது.

Image

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். 3-வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 132.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 432 ரன்கள் குவித்தது.இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது.பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆடியது.

உணவு இடைவேளைக்கு முன் கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.ஒருபுறம் ரோஹித் சர்மா நிலைத்து நின்று ஆட மற்றொருபுறம் புஜாரா அதிரடியாக ஆடினார்.வழக்கமாக ஆமை வேகத்தில் ஆடும் புஜாரா இம்முறை சற்று அதிரடியாக ஆடியது ரசிகர்களை கவர்ந்தது. அட்டகாசமாக ஆடிய ரோஹித் 126 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Image

தேநீர் இடைவேளைக்கு பின் ரோகித் சர்மா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு வந்த கேப்டன் கோலி புஜாரா உடன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடிய புஜாரா 91 பந்துகளில் அரைசதம் கடந்தார்.80 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.புஜாரா 91 ரன்களுடனும்,கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யவே இன்னும் 139 ரன்கள் தேவைப்படுகிறது.போட்டி முடிய இன்னும் இரண்டு நாள் இருப்பதனால் நாளை இந்திய அணியின் பேட்டிங் பொறுத்தே ஆட்டம் சமனிலோ அல்லது வெற்றி தோல்வியிலோ முடியும் என்பது தெரியும்.