பாகிஸ்தான் அணியோடு டெஸ்ட் தொடரை வென்று, டி20 தொடரைச் சமன் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றி நடை ஆஸ்திரேலிய போட்டியிலும் தொடர்கிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளை ஆட திட்டமிட்டிருக்கின்றன இரு அணிகளும்.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்போட்டித் தொடரைப் பார்த்து வருகின்றனர். நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் த்ரில் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதல் பேட்டிங்கை இங்கிலாந்து அணிக்கு அளித்தது. ஓப்பனிங்க் பேட்ஸ்மேன் ஜானி பர்ஸ்டோ 8 ரன்களில் அவுட்டாகி விட்டாலும், ஜாஸ் பட்லர் 44 ரன்களைக் குவித்தார். டேவிட் மலன் 43 பந்துகளில் 66 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் 3 சிக்ஸர்களும் 5 ஃபோர்களும் அடங்கும். 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், அஷ்டோன் அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

163 ரன்கள் என்பது எளிமையான ஸ்கோர்தான். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஈஸியாக அடித்துவிடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால், எதிர்பார்த்ததை விட பவுலிங்கில் இங்கிலாந்து அணி திறமையைக் காட்டியது.
ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் (58 ரன்கள்), ஆரோன் பின்ச் (46 ரன்கள்) ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால், அதற்கு அடுத்த வீரர்கள் சொல்லும்படியான ஆட்டத்தை வெளிபடுத்த வில்லை. ஸ்டீவ் ஸ்மித் 18 ரன்கள், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 23 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்கள்.

ஆயினும் இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி எனும் த்ரில் ஓவர் நடந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டொய்னிஸ் சிக்ஸர் அடித்து நம்பிக்கையும் அளித்தார். ஆனால், அடுத்த 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 160 ரன்களையே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியை வென்றது இங்கிலாந்து அணி.