இந்தியா- இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

 

இந்தியா- இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது.

கடந்த ஆட்டத்தில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனுக்கு காயம் இன்னும் குணம் அடையாததால் இந்த தொடரில் இருந்து வெளியேற இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் செயல்பட்டார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். கடந்த ஆட்டத்தில் ஜொலித்த ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் 4 ரன்களில் வெளியேறினார், மேலும் ரோஹித் சர்மா 25 ரன்களில் வெளியேற , பிறகு கோலி மற்றும் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார்.

Image

அரை சதம் அடித்த கேப்டன் கோலி, அடில் ரசித் பந்துவீச்சில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் , கே.எல் ராகுல் உடன் சேர்ந்து அதிரடியாக ஆட தொடங்கினர். அருமையாக ஆடிய ராகுல் சதம் அடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். இறங்கியது முதல் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் ஹார்டிக் பாண்டியா 35 ரன்கள் விளாச இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

337 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தை போலவே இந்த ஆட்டத்திலும் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது , முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்ந்த இந்த ஜோடி ரன் அவுட் மூலம் பிரிந்தது , ஜேசன் ராய் 55 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். கடந்த ஆட்டத்தில் நூலிழையில் சதத்தை தவறவிட்ட பேர்ஸ்டோ இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 100 ரன்களை கடந்தார். 10 சிக்ஸர்கள் , 4 பவுண்டரிகள் என பந்துகளால் வானவேடிக்கை காட்டிய பென் ஸ்டோக்ஸ் துரதிஷ்டவசமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பேர்ஸ்டோ 124 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Image

இதில் இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 1 – 1 என சமன் செய்துள்ளது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது