`இறுதிச்சடங்கை மகன்கள் செய்யக்கூடாது; கதறிய பிள்ளைகள்!’‍- உயிரை மாய்த்த முதிர் வயது தம்பதி உருக்கமான கடிதம்

 

`இறுதிச்சடங்கை மகன்கள் செய்யக்கூடாது; கதறிய பிள்ளைகள்!’‍- உயிரை மாய்த்த முதிர் வயது தம்பதி உருக்கமான கடிதம்

“எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு முதிர் வயதான தம்பதி உருக்கமாக கடிதம் எழுதிவைத்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு நெட்டால் தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (60)- செல்வி (55) தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டையிலும், 2வது மகன் பெரம்பூரிலும் தங்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். 3வது மகன் ஸ்ரீதர் (29) தனது பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணமாகாத அவர், தச்சராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதர், சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்துவிடுவார். ஆனால் பெற்றோருக்கு பணம் கொடுப்பதில்லை.

முதிர் வயதிலும் தச்சராக வேலை பார்த்து வந்த குணசேகரனுக்கு ஊரடங்கால் வேலை இல்லாமல் போனது. இதனால் காவலாளியாக வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் அந்த வருமானம் கட்டுப்படியாகவில்லை. இதனால், வீட்டு வாடகையும் நான்கு மாதங்களாக அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் தவித்த தம்பதி, தங்கள் 2 மகன்களிடம் பேசியுள்ளனர். அப்போது அவர்கள், வாடகையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தங்களுடன் வந்து விடுங்கள்” என்று கூறியுள்ளனர்.

`இறுதிச்சடங்கை மகன்கள் செய்யக்கூடாது; கதறிய பிள்ளைகள்!’‍- உயிரை மாய்த்த முதிர் வயது தம்பதி உருக்கமான கடிதம்

ஆனால் இந்த தம்பதி என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே, இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த ஸ்ரீதர், கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது, அப்பாவும், அம்மாவும் துாக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று சடலங்களை மீட்டனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்னதாக குணசேகரன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், “எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என உருக்கமாக எழுதியுள்ளனர். இதையடுத்து பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் கதறியதால் காவல்துறையினர் அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடலை சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் காவல்துறையினர் மரியாதை செய்ததோடு, மகன்கள் முன்னிலையில் உடல்கள் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டன.