பெண்களை அதிக அளவில் பாதிக்கும் 8 பிரச்னைகள்!

 

பெண்களை அதிக அளவில் பாதிக்கும் 8 பிரச்னைகள்!

இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, இந்த நேரத்தில் விழிப்புணர்வும் தேவை. பெண்கள் பல திறமை படைத்தவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்காக விழுந்துவிழுந்து சேவை புரிபவர்களாக இருந்தாலும் தங்களுக்கு என்று வரும்போது கவனிப்பு குறைந்துவிடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் எட்டு பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பெண்களை அதிக அளவில் பாதிக்கும் 8 பிரச்னைகள்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

ஒரு ஆண்டில் தோராயமாக 60 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உயிரிழக்க இந்த புற்றுநோய்தான் காரணமாக உள்ளது. நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் இந்த நோய் பாதிப்பு அதிகம். விழிப்புணர்வு இன்மையே இவ்வளவு உயிரிழப்பு நிகழ காரணம். இந்த நோய் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் காரணமாக வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு புற்றுநோயாக மாற 10 -15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தால் பெண்களைக் காப்பாற்றலாம். இதற்கு பாப்ஸமியர் என்ற எளிய பரிசோதனையே போதுமானது.

மார்பக புற்றுநோய்

நகர்ப்புறங்களில் பெண்களை தாக்கும் மிகப்பெரிய பாதிப்பு மார்பக புற்றுநோய். 30- 40 வயதுக்குட்பட்ட பெண்கள் பலரும் இதனால் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறிய முடியும். மேமோகிராஃபி இதற்கு உதவி செய்கிறது.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் (பிசிஓடி)

சமீப காலத்தில் உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பு காரணமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை ஏற்படுகிறது. இது பெண்கள் மத்தியில் குழந்தைப்பேறின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

குழந்தையின்மை

இது நோய் இல்லை என்றாலும் மிகப்பெரிய மனக்குறை. படிப்பு, வேலையில் கவனத்தை செலுத்தும் பெண்களுக்கு மன அழுத்தம் அளவு அதிகரிக்கிறது. உடலில் ஹார்மோன் சமநிலை பாதிக்கிறது. தைராய்டு பிரச்னை முதல் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. சரியான காலத்தில் திருமணம் செய்யாமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மன அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை பெண்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முன்கூட்டிய மெனோபாஸ்

மாதவிலக்கு நிற்கும் காலம் பெண்களுக்கு முன்கூட்டியே வந்துவிடுகிறது. இதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவு, மன அழுத்தம் போன்றவை காரணமாக அமைகிறது. முன்கூட்டியே மெனோபாஸ் வருவது இதய நோய், எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

இதய நோய்கள்

ஒரு காலத்தில் 50 – 55 வயதைக் கடந்த பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படும். மெனோபாஸ் முடிந்த நிலையில் அதுவரை கொழுப்பு படிவதற்கு தடையாக இருந்த ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் கொழுப்பு படிதல் அதிகரிக்கிறது. தற்போது மெனோபாசுக்கு முன்பாகவே கூட பெண்களுக்கு இதய நோய்கள் வருகின்றன. இதற்கு வாழ்வியல் மாறுபாடுகளே காரணம் என்கின்றனர்.

ஆஸ்டியோபொரோசிஸ்

உலக அளவில் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு பிரச்னை உள்ளது. பெண்களின் எலும்பு அடர்த்தியை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பாதுகாக்கிறது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும்போது எலும்பு அடர்த்தி குறைகிறது. இதனால் சாதாரணமாக விழுந்தாலே எலும்பு உடைதல் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறையாவது பெண்கள் தங்கள் எலும்பு அடர்த்தியை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஃபைப்ராய்ட்ஸ்

பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் அவர்களுக்கு மிக நீண்ட மாதவிலக்கு, மற்றும் மாதவிலக்கின் போது மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது. இந்த கட்டி கர்ப்பப்பையின் உள்ளே, வெளியே, உள்-வெளி சுவருக்கு இடைப்பட்ட பகுதியில் என எங்கு வேண்டுமானாலும் வரலாம். அல்ட்ராசவுண்ட், ஆய்வுக்கூட பரிசோதனை மூலம் இதை கண்டறியலாம்.