ஆரோக்கியமான, நீண்ட கூந்தலுக்கு வீட்டிலேயே இருக்கு எளிய தீர்வு!

 

ஆரோக்கியமான, நீண்ட கூந்தலுக்கு வீட்டிலேயே இருக்கு எளிய தீர்வு!

ஆரோக்கியமான, நீண்ட, கருகருவென்று வளர்ந்திருக்கும் கூந்தலை விரும்பாதவர்கள் யார் உள்ளனர்? உடையக் கூடிய முடி, பிளவுபடுதல், உதிர்தல் பிரச்னையைக் கண்டு வெறுத்துப்போன ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான நீண்ட கூந்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவேத் தோன்றும். விலை உயர்ந்த ஷாம்பு, கண்டீஷனர், ஹேர் சீரம், பியூட்டி பார்லர் மாஸ்க் என எதை எதையோ முயற்சி செய்தும் பலன் இல்லை என்று வேதனைப்படுபவர்கள்தான் அதிகம். ஆரோக்கியமான, நீண்ட அழகான கூந்தலுக்கு நம்முடைய வீட்டிலேயே தீர்வு உள்ளது.

ஆரோக்கியமான, நீண்ட கூந்தலுக்கு வீட்டிலேயே இருக்கு எளிய தீர்வு!

அதுதான் முட்டை… நம்முடைய வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் முட்டை இல்லாமல் இருப்பது இல்லை. இந்த முட்டைகளை நம்முடைய கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

முட்டையில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. அது கூந்தலுக்குத் தேவையான புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதன் மூலம் முடி ஆரோக்கியமாக வரும்.

முடியின் வேர்க்காலில் முடியின் புரதச்சத்து சென்று சேரும்போது அதை ஈர்க்கும் வேர்க்கால் முடியை வலிமையாக்குகிறது. தலை மேற்பரப்பு தூண்டப்படுகிறது. இதன் காரணமாக முடியின் வேர்க்கால் உறுதியாகிறது. இதன் காரணமாக முடி பிளவுபடுதல், உதிர்தல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.

முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் என்ற சத்து உள்ளது. இது கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இதன் காரணமாக முடிகள் பிளவுறுதல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து முட்டையை கூந்தலில் தடவி குளித்து வந்தால் முடி பொலிவு பெறுகிறது. ஷாம்புக்கள் போல அல்லாமல் முடியின் இயற்கையான எண்ணெய்யை பாதுகாக்க முட்டை உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, இ, பயோடின், ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை முடியின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி ஊறவிட வேண்டும். இந்த கலவை முடியின் வேர்க்கால் வரை இறங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெதுவெப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அவை உறுதியாகும்.

முட்டையின் வெள்ளைப் பகுதி கூந்தலுக்கு மிகச்சிறந்த ஊட்டத்தை அளிக்கும். அதில் ரைபோஃபிளேவின், நியாசின், பொட்டாசியம், மக்னீஷியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் கே, ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது பொலிவின்றி காணப்படும் கூந்தலுக்கு சிறந்த போஷாக்கை அளிக்கும். எனவே முட்டையின் மஞ்சள் கருவா, வெள்ளைப் பகுதியா என்று யோசிக்காமல் இரண்டையும் கலந்து தலையில் தடவுவது நல்லது.

இரண்டு முட்டையின் வெள்ளைப் பகுதி, பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி, புளிக்காத தயிர் ஒரு தேக்கரண்டி விட்டு நன்கு அடித்து தலையில் தடவலாம். இது கூந்தலை மென்மையாக்கும். கூந்தலின் ஃபிளெக்சிபிளிட்டி அதிகரிக்கும்.