தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் – முதல்வர் பழனிசாமி

 

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் – முதல்வர் பழனிசாமி

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வரை சந்தித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் அன்பழகன், கோவி செழியன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதாக முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார். மேலும் தூர்வாரும் பணிகள் முறையாக செய்து கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் – முதல்வர் பழனிசாமி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் தலைமை வகிக்கும். ஏற்கனவே சந்தித்த அனைத்து தேர்தல்களும் அதிமுக தலைமையில் தான் நடைபெற்றது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில்தான் கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் சந்தித்தோம். பெட்ரோல் மீதான மாநில செஸ் வரி குறைக்கப்படாது.

தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது

கொரோனா சிகிச்சைக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி-கோதாவரியை இணைக்க பலமுறை வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.