கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி

 

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 25ம் தேதி நிவர் புயல் மற்றும் கடந்த 30ம் தேதி புரெவி புயல் தாக்கியது. இதன் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

தாழ்வான குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் ஏராளமான மக்கள் குடிக்க தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் முதலமைச்சர் பழனிசாமி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் கடலூர் சென்றார். அங்கு வயலில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட அவர், விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி

வெள்ள பாதிப்பு ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கனமழையால் கடலூரில் நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. கனமழையால் கடலூரில் உள்ள பல ஏரிகளும், குளங்களும் நிரம்பி உள்ளன. அவற்றை அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு அவற்றிற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும்” எனக் கூறினார்.