அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்- முதல்வர் பழனிசாமி

 

அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்- முதல்வர் பழனிசாமி

நாளை தேசிய கண்தான தினம் அனுசரிக்கப்படுவதையடுத்து தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்த விழிப்புணர்வு நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாளை 35 ஆம் ஆண்டு தேசிய கண்தான தினம் அனுசரிக்கப்படுவதால் தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கண் தானம் செய்ய வயது வரம்பு இல்லை. ஒரு வயது குழந்தை முதல் யாரு வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. கண் தானம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கண் தானம் செய்ய விரும்புவோர் https://hmis.tn.gov.in/eye-donor/ என்ற லிங்கை பயன்படுத்தி, தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கண்தானம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஈ- சான்றிதழையும் உடனடியாக பதிவிறக்கலாம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்தானம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கண்தானம் செய்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.