darbar
  • January
    25
    Saturday

Main Area

Main



காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கைதானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை: எடியூரப்பா பேட்டி!

டி.கே சிவகுமார்
டி.கே சிவகுமார்

கர்நாடகா: கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே சிவகுமாரை அமலாக்கத்துறையினர் நேற்று இரவு அவரைக் கைது செய்தனர். 

கர்நாடகாவில் சமீபத்தில் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து தற்போது எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த அரசியல் வியூகத்தில் ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியின் அதிருப்தி எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்கு அழைத்துவரக் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே சிவகுமார் முயற்சி மேற்கொண்டார். இருப்பினும் அவரது முயற்சிக்கான பலன் கிடைப்பதற்குள் ஆட்சி கவிழ்ந்து விட்டது. 

shivakumar

இதையடுத்து டி.கே. சிவகுமார் மீது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் அவரிடம் கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் சிவகுமார் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி நேற்று இரவு அவரை கைது செய்தனர். இதுகுறித்து டி.கே. சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில், 'இறுதியாக என்னைக் கைது செய்யும் மிஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பா.ஜ.க நண்பர்களுக்கு வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், 'வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்குப் பலிகடா ஆகியவன் நான். எனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் யாரும் மனமுடைந்துபோக வேண்டாம். நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எனக்கு கடவுள் மற்றும் நமது நாட்டின் நீதித்துறை மீது அபார நம்பிக்கை இருக்கிறது. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பா.ஜ.க-வின் அரசியல் சதியிலிருந்து மீண்டு வருவேன்'  என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதுகுறித்து கூறும் காங்கிரஸ் கட்சியினர், பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் வேகம் காட்டப்பட்டது.   பா.ஜ.க அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. இப்படி கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த விவகாரம் குறித்து வாய்திறந்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா , டி.கே சிவகுமாரின் கைது எனக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனது வாழ்வில் நான் யாரையும் வெறுத்தது கிடையாது. யாரையும் காயப்படுத்தினதும் கிடையாது. சிவகுமார் விடுதலை ஆகிவிட்டார் என்ற செய்திதான் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்” என்றார். 

yeddy

முன்னாள் அமைச்சர் சிவகுமாரின்  கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.