கேரளாவில் தொற்று அதிகரிப்பு எதிரொலி… ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு!

 

கேரளாவில் தொற்று அதிகரிப்பு எதிரொலி… ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு!

ஈரோடு

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கொரோனா பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இன்றி வருபவர்களுக்கு, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. இதேபோல், வட மாநிலத்தவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதையடுத்து, ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினர், ரெயில்வே போலீசார், மாநகராட்சி சார்பில் ஈரோடு ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் 24 மணிநேரமும் முகாமிட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் கேரளா ரெயில் பயணிகள், வட மாநிலத்தவர்களை சோதனை செய்து வருகின்றனர்.

கேரளாவில் தொற்று அதிகரிப்பு எதிரொலி… ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு!

இதேபோல், கர்நாடகாவில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கும், மாநில எல்லைப் பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் முடிய தொடங்கியதும், மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து ஈரோடு ரெயில் நிலையத்தில் மீண்டும் மருத்துவ குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யும்போது, வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு பாதிப்பு இல்லை என்றால் தான், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல், தாளவாடி எல்லைப் பகுதிகளிலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.