மின் இணைப்பு வழங்க ரூ.4,000 லஞ்சம்; மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட இருவர் கைது!

 

மின் இணைப்பு வழங்க ரூ.4,000 லஞ்சம்; மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட இருவர் கைது!

சேலம்

சேலத்தில் விசைத்தறி கூடத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கணியம்பாடி வெள்ளாளபுரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது விசைத்தறி கூடத்திற்கு புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக, தேக்கம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக, அங்கு உதவி பொறியாளராக பணிபுரியும் குணசேகரனை அணுகிய போது, அவர் மின் இணைப்பு வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பு வழங்க ரூ.4,000 லஞ்சம்; மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட இருவர் கைது!

லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்களது ஆலோசனைப் படி, ரசாயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாய் பணத்தை, குணசேகரனிடம் கொடுக்க முயன்றபோது, பணத்தை இடைத்தரகர் வெங்கடாசலம் என்பவரிடம் கொடுக்கும் படி கூறினார்.

அவர் கூறியபடி சதீஷ், வெங்கடாசலத்திடம் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், வெங்கடாசலம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி பொறியாளர் குணசேகரனை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கணக்கு பிரிவு ஊழியர் ஏழுமலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.