திரும்பத் திரும்ப கை கழுவிகிட்டே இருக்கீங்களா… ஓ.சி.டி பிரச்னையா இருக்கலாம்!

 

திரும்பத் திரும்ப கை கழுவிகிட்டே இருக்கீங்களா… ஓ.சி.டி பிரச்னையா இருக்கலாம்!

வீடு சுத்தமாக இருக்க வேண்டும், எல்லா பொருளும் அந்த அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது நல்ல ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால் இந்த ஆரோக்கியமான பழக்கம் இருக்கிறதா என்பதை மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொள்ளும் பழக்க வழக்கம் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சுத்தமாக இருக்க வேண்டும் என்று கையை அடிக்கடி கழுவிக்கொண்டே இருப்பது, திரும்பத் திரும்ப வீட்டைச் சுத்தம் செய்வது, மீண்டும் மீண்டும் துணியைத் துவைப்பது, மீண்டும் மீண்டும் துணிகளை அடுக்கி வைப்பது எல்லாம் அப்சசிவ் கம்பல்ஷன் டிஸ்ஆர்டர் (ஓ.சி.டி) பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

திரும்பத் திரும்ப கை கழுவிகிட்டே இருக்கீங்களா… ஓ.சி.டி பிரச்னையா இருக்கலாம்!

சிலர் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழி என்று கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டே இருப்பார்கள். இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கம் குறையும் என்றாலும், மீண்டும் மீண்டும் இப்படி செய்வது நிலைமையே மோசமாக்கிவிடும். ஒரு நாளைக்கு 10, 20 முறை கைக் கழுவுவது மாறி, விடாமல் கைக் கழுவிக் கொண்டே இருக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்கள். அளவுக்கு அதிகமாக சுத்தம் பார்த்து கைகளை கழுவிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம்.

சிலர் சரியாக பூட்டினோமா, கேஸ் ஆஃப் செய்தோமா என்று திரும்பத் திரும்ப செக் செய்து கொண்டே இருப்பார்கள். வாசலில் மிகப்பெரிய பூட்டு போட்டிருப்பார்கள், அதை மீண்டும் மீண்டும் இழுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வெளியே சென்றாலும் பூட்டு ஒழுங்காக பூட்டினோமா என்ற பயம் இருக்கும். இதனால் மீண்டும் வீட்டுக்கு வந்து பரிசோதிப்பார்கள். இவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்ற எண்ணமே வராது. இப்படி அடிக்கடி செக் செய்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

சிலருக்கு சில பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்தாக வேண்டும். போன், டேபிள், கப் என எல்லாம் வைத்த இடத்தில் வைக்க வேண்டும் என்று பர்ஃபெக்‌ஷன் பார்ப்பார்கள். அவை இடம் மாறியிருந்தால் பதற்றம் ஏற்படும். அப்படி பதற்றம் ஏற்படுகிறது என்றால் அதுவும் ஓசிடி அறிகுறியாக இருக்கலாம்.

சிலர் தங்களின் உடல் அழகு பற்றிய அதீத அக்கறையுடன் இருப்பார்கள். மூக்கு, புன்னகை, தலை முடி ஸ்டைல் என எல்லாவற்றையும் கவனித்து செயல்படுவார்கள். பொது இடங்களில் அவை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை என்று கவலைப்படுவார்கள். இந்த உணர்வும் ஓ.சி.டி-யின் அறிகுறியாக இருக்கலாம்.

ஓ.சி.டி என்பது மூளையில் உள்ள ரசாயனங்களின் சமநிலை பாதிப்பால் ஏற்படும் பாதிப்புதான். இதற்கு சிகிச்சை உள்ளது. மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று சில தெரப்பிகள், மாத்திரை மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால் இந்த பிரச்னையில் இருந்து முற்றிலுமாக நீங்க முடியும்.