சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் உண்டாகியுள்ளது. அத்துடன் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் சென்னையை பொறுத்தவரையில் லேசான மழை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

இந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.