‘முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு குறைவு’ : தேர்தல் ஆணையம்

 

‘முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு குறைவு’ : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அண்மையில் தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதற்கு அதிமுக தரப்பு ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு, தேர்தலை 3 கட்டங்களாக நடத்தலாமா என்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

‘முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு குறைவு’ : தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு, “கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை. ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 68 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வர உள்ளன என்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளது” என்றும் அவர் கூறினார்.