ஈ.வெ.ரா ”பெரியார்” ஆன தினம் இன்று!

 

ஈ.வெ.ரா ”பெரியார்” ஆன தினம் இன்று!

பெரியார் எந்த வரையறைக்குள்ளும் அடக்க இயலாத ஒரு சகாப்தம். இன்றைக்கு சமூக செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் அஸ்திவாரம் பெரியாரின் கொள்கைகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுவாக பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் பெரியாரையே விமர்சனப்படுத்தி அதன் மூலம் பகுத்தறிவைத் தேடி கொள்பவர்களாக இருப்பார்கள். அதை, “யார் சொல்லி இருந்தாலும், எங்கு சொல்லியிருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று” என பெரியாரே குறிப்பிடுகிறார்.

பெரியார் தன் கொள்கைகளை பறைசாற்றியதோடுமட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது சுய வாழ்க்கையே அதற்கு மிகப்பெரிய உதாரணம். பெரியாரின் சமூக விடுதலையின் மிக முக்கிய அங்கம் பெண் விடுதலை. அவரது பெண்ணிய பார்வைதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை என்று தோன்றுகிறது. “கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக்கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி, ஆகியவை பெண்களுக்கும் உண்டாகும்படி செய்ய வேண்டும்” என்று 85 வருடத்திற்கு முன் முதன்முதலில் ஒலித்தது பெரியார்தான்.

ஈ.வெ.ரா ”பெரியார்” ஆன தினம் இன்று!

பெண்களுக்கு கல்வி சொத்துரிமை போன்றவைகள் அடிப்படை தேவை என்றும் கைம்மை வாழ்வு வரதட்சணை கொடுமை போன்றவை அகற்றப்பட வேண்டியவை என்றும் கர்ஜித்த ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பகுத்தறிவு பகலவனுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது இதே தினத்தில்தான். கடந்த 1938 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் தருமாம்பாள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதகக்து.