ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி!

 

ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருக்கும் தொழில்கள், வேலைவாய்ப்புகள் முடங்கினாலும் விறுவிறுப்பாகவும், தொய்வில்லாமலும் செயல்பட்ட வர்த்தக துறைகளில் முக்கியமானது வங்கித் துறை. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிச் சேவைகள் தொய்வின்றி கிடைத்தாலும், கூட்டுறவு வங்கிச் சேவைகளில் செயல்பாடுகள் அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதிலிருந்து விதிவிலக்காக, ஒரு கூட்டுறவு வங்கி மட்டும் பொதுத்துறை வங்கிகளைப் போல விறுவிறுப்பாக செயல்பட்டு சாதனை ஈட்டியுள்ளது. அந்த வங்கி ரெப்கோ வங்கி.

தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வுக்கு என தொடங்கப்பட்ட, ரெப்கோ வங்கி, தற்போது அனைத்து சேவைகளையும் அளிப்பது மக்கள் அறிந்ததுதான். கூட்டுறவு வங்கி என்றாலும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக கொரோனா ஊரடங்கு காலத்தில், தொய்வில்லாமல் இயங்கி நுண்கடன் துறையில் சாதனை படைத்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி!

சமீபத்தில், இந்திய அளவில் கூட்டுறவு வங்கிகளுக்கான செயல்பாட்டில், கூட்டுறவு வங்கிகளில் சிறந்த பெண் தலைவர் என்கிற விருதினை பெற்றுள்ளார் ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் இஸபெல்லா. நுண்கடன் துறையில் சாதனை, சிறந்த பெண் தலைவர் விருது பெற்றது தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்தோம்.

”கடந்த சில ஆண்டுகளில் வங்கியின் செயல்பாடுகளில் கொண்டு வந்த பல மாற்றங்கள்தான் இந்த விருதுக்கு காரணம். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாங்கள் கூட்டுறவு வங்கிதான். அதனால், காலத்துக்கு ஏற்ப பல முக்கிய சேவைகளை அளிக்க முடியாது. குறிப்பாக, ஏடிம் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வழங்க அனுமதி இல்லை. ஆனாலும், எங்களது வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் அளப்பரிய பணிகளால், இந்த சாதனைகள் சாத்தியமானது.

ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி!

குறிப்பாக, நுண்கடன் துறை என்கிற சிறுகடன்கள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன்களில் மிகத் தீவிரமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை செய்தோம். ரெப்கோ நுண்கடன் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்து, தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழு கட்டமைப்பை வலுவாக உருவாக்கிய அனுபவம் உள்ளதால், கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தினோம்.

ஆண்கள் வேலை இழந்த, வருமானம் இழந்த நேரத்தில், பெண்களுக்கு கிடைக்கும் சிறு உதவியும் குடும்பத்தை சீராக நடத்த உதவும். அந்த வகையில், ஊரடங்கு காலத்தில் அதிக நுண்கடன் வழங்கியுள்ளோம். எங்களது நுண்கடன் வங்கி மூலம் இதுவரை 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளோம். சுமார் 12 லட்சம் பெண்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்த இந்த உதவிகள் அவர்களில் குடும்பங்களை நடத்த உதவியுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் இந்திய அளவில் இப்படி துடிப்பாக செயல்பட்டதால், இந்திய கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில், சமீபத்தில் சிறந்த கூட்டுறவு வங்கித் தலைவர் விருது எனக்கு அளிக்கப்பட்டது. எனக்கு அளிக்கப்பட்டது என்றால், எங்கள் வங்கிக்கு கிடைத்த அங்கீகாரம் தான். எங்களது பணியாளர்கள் நிகழ்த்திய சாதனை இது.

ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் சாதித்த ரெப்கோ வங்கி!

பெண்களில் பொருளாதார முன்னேற்றத்துக்கு சிறந்த பங்களிப்பை செய்யும் வங்கி என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அளிக்கும் விருதினை 5 முறை பெற்றுள்ளோம். நபார்டு வங்கி விருதினை 3 முறை பெற்றுள்ளோம்” என்றார்.

மோசடிகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த வங்கி விருதினையும் தேசிய கூட்டமைப்பு ரெப்கோ வங்கிக்கு அளித்துள்ளது. இப்படி சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்துவரும் இந்த வங்கி, ரிசர்வ் வங்கியின் தலைமையின் கீழ் இயங்குவதற்கு விண்ணப்பித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும், ரிசர்வ் வங்கி கண்காணிப்புக்குச் சென்றாலும், வங்கிச் சேவைகளை மக்கள் நலனோடு இணைத்து செயல்படுத்துவது என்று தொடரட்டும்.