கொரோனாவுக்கு மத்தியில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வரை தாக்கிய துரைமுருகன்

 

கொரோனாவுக்கு மத்தியில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வரை தாக்கிய துரைமுருகன்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “வேலூரில் முதல்வர் ஆய்வு செய்ய வருகிறார் என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் அதுவாது நடக்கிறதே என்று…. ஆனால் மக்கள் பிரதிநிதிகளை தி.முக எம்.எல்.ஏ, எம்.பிக்களை அழைப்பார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் இறுதி வரை அழைக்கவில்லை. ஆனால் ராணிப்பேட்டை மாநிலங்களை உறுப்பினர் முகமது ஜான் கலந்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து ஆய்வு கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசு விழாவை அதிமுக ஆய்வு கூட்டமாக நடத்திய முதல்வரை நாங்கள் கண்டிக்கிறோம். தற்போது நடந்தது ஆட்சிமன்ற கூட்டமா? அல்லது வடஆற்காடு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டமா என கேள்வி எழுப்புகிறேன்?. எங்களை திட்டமிட்டு ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம். இது அரசு ஆய்வு கூட்டமா அல்லது அதிமுக பொது கூட்டமா என தெரியவில்லை. நான் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர், எதிர்கட்சி துணை தலைவராகவும் உள்ளேன். ஆனால் என்னையும் மதிக்கவில்லை. “ஏதோ நட்டா முட்டா நாராயண என்று ஆய்வுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்” முதல்வர் இதை செய்வது அடாவடி. இது முன்னதாகவே தெரிந்திருந்தால் போராட்டம், கருப்பு கொடி காட்டியிருப்போம்.

கொரோனாவுக்கு மத்தியில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வரை தாக்கிய துரைமுருகன்

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அதிமுக ஒரு நிலைபாட்டையும், பா.ஜ.க ஒரு நிலைபாட்டையும் கூறி வருகிறது இதில் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. ராணிப்பேட்டை, வேலூரில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. குடிநீர் பிரச்சனையை போக்க பொன்னையாற்றில் தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்கள் அதுவும் இதுவரை செயல்படுத்தவில்லை. வேலூருக்கு கல்லூரி, மருத்துவமனை வரும் என சொன்னார்கள் இதுவரை இல்லை” எனக் கூறினார்.