ஆற்றல் தரும் முருங்கை கீரை சூப்!

 

ஆற்றல் தரும் முருங்கை கீரை சூப்!

ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் சூப்-க்கு முக்கிய இடம் உண்டு. வீட்டில் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் செய்யும் வரை ஆரோக்கியமானதாக இருந்தது… தற்போது பதப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேர்த்து சூப் தயாரிப்பதால் அதன் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. நம்முடைய வீட்டிலேயே எளிய சூப்களை செய்து குடிக்கலாம்.

ஆற்றல் தரும் முருங்கை கீரை சூப்!

முருங்கை சூப்

முருங்கை கீரையில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. வைட்டமின் பி2, சி, இரும்புச் சத்து, புரதச் சத்து, நார்ச்சத்து என உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முருங்கையில் உள்ளன. கை அளவு கீரை மூலம் ஆரோக்கியமான சூப்பை செய்துவிட முடியும்.

தேவையான பொருட்கள்:

கையளவு முருங்கைக் கீரை.

சீரகம் அரை டீஸ்பூன்.

நறுக்கிய வெங்காயம் ஒரு டேபிள் ஸ்பூன்.

சின்ன வெங்காயம் – 6.

தக்காளி – 1.

தண்ணீர் 2 கப்.

இஞ்சி – சிறு துண்டு.

உப்பு, மிளகு – சுவைக்கு ஏற்ப.

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முருங்கைக் கீரையை கிள்ளி, சுத்தம் செய்து நீரில் அலசி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கீரையை அரைக்க வேண்டாம். கீரையை அரைத்தால் சூப் கசப்பாக இருக்கும்.

சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி, பூண்டு உள்ளிட்டவற்றையும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பைப் பற்றவைத்து கடாயை வைத்து எண்ணெய் விட வேண்டு. கடாய் சூடானதும் சீரகத்தைப் போட வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டைப் போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் தக்காளி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். 2-3 நிமிடங்கள் வதக்கிய பிறகு, தண்ணீர் விட்டு 5-10 நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டால் முருங்கை கீரை சூப் தயார். சூப் அருந்தும் போது மிளகு, தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

முருங்கைக் கீரையை தொடர்ந்து சேர்த்து வந்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி அடையும். சருமப் பிரச்னைகள் விலகும். கை, கால் மூட்டு வலி குறையும். புண்களை ஆற்றும். கண் பார்வை திறன் அதிகரிக்கும். இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோவை வராது. ரத்த உற்பத்தி அதிகரிக்கும். பெண்கள், கர்ப்பிணிகள் இதை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். இது தவிர இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக செயல்படவும் துணை புரியும்.