கர்நாடகாவிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் சிக்கியது!

 

கர்நாடகாவிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் சிக்கியது!

கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பங்களாபுதூர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் வனத்துறை சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பங்களாபுதூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் சிக்கியது!

அப்போது அந்த வழியாக வந்த குறிப்பிட்ட வேனை நிறுத்தி சோதனை செய்த போது, பூண்டு மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பூண்டு மூட்டைகளை இறக்கிய பின்பு வாகனத்தின் உள்ளே சோதனை செய்த போது 35 மூட்டைகள் மற்றும் 10 அட்டை பெட்டிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வேனுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேன் ஓட்டுநர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புகையிலை பொருட்கள் கர்நாடக மாநிலம் கோழிபாளையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தலில் யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்தும் தமிழகத்திற்கு எங்கெங்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.