பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

 

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவை தமிழக மாணவர்கள் துறந்துவிட வேண்டும் என்பதாக இருக்கிறது நீட் தேர்வு நெருக்கடிகள். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் ஓரிருவர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மருத்துவக் கல்வி வணிக மயமாக்கப்படுவதை தடுக்கவும் நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இந்தியா முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஒரே தகுதி என என விளக்கம் அளித்து வருகிறது.

ஆனால், மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துகிறார்கள் என்றால், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் கொடுத்து சேர்வது தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்க வேண்டும் என்றால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் அனைத்தையும் அரசு கையகப்படுத்தி இருக்க வேண்டும். இதை இரண்டையும் செய்யாமல், கிராமப்புற, ஏழை, நடுத்தர வர்க்க குழந்தைகளின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது நீட் எனும் எமன்.

மருத்துவர் ஆக வேண்டும் என ஆசையோடு இருந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வு எனும் தடை இல்லை என்றால் அவரால் எளிதாக மருத்துவர் ஆகி இருக்க முடியும்.

உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். கடைசியில் நீட் எழுத வேண்டும் என கழுத்தைப் பிடித்து தள்ளியதில், அந்த கிராமப்புற பிஞ்சு 720 க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தது. தனது கண் முன்னே, கனவு தகர்ந்ததில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். நீட் எமன் காவு வாங்கிய முதல் குழந்தை அனிதா.

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

மாநிலத்தை புரட்டி போட்ட, அந்த மரணம், இப்போதும் ஜீரணிக்க முடியாத ஒன்று. ஏழை கிராமப்புற மாணவி நீட் தேர்வில் தோல்வி, அதனால் தற்கொலை செய்து கொண்டார் என கடந்து செல்ல கூடிய மரணமல்ல அது. ஆனால், அடுத்தடுத்து நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது அனிதாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம், பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னையில் ஏஞ்சலின் சுருதி ஆகிய மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டில், திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ, மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகியோரும், பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டார்.

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

இப்படி கடந்த 3 ஆண்டுகளில் பல பிஞ்சுகளில் உயிரை குடித்த நீட் தேர்வு, இந்த ஆண்டும் அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வருகிறது.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ கடந்த ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அரியலூர் செந்துறையைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கண்ணீர் தடம் காய்வதற்குள் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?

இப்படி அடுத்தடுத்த மரணங்கள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுக்கின்றன. தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கில் அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

நீட் தேர்வுக்கு பயிற்சி எடுக்க முடியாத சூழல், நீட் ஏற்படுத்தும் அச்சம், தேர்ச்சி பெற முடியாத சோகம் என ஒவ்வொன்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
மாணவர்களுக்கு மன அழுத்ததைக் குறைக்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என ஆலோசனை செய்வதை விடவும், தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த பிள்ளைகள் நீட் தேர்வு குறித்து எழுதி வைத்த காரணங்களுக்கு ஒரு விடை தேட வேண்டும்.

பழிவாங்கும் மருத்துவர் கனவு ! நீட் தேர்வை நீக்குவதுதான் தீர்வா?


”எனக்காக இல்லை, என்னை போன்ற ஏழை மாணவர்களுக்காக நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், என்னை போன்ற பல ஏழை மாணவர்களின் கனவை அது கலைக்கும்” என்று ஊடகங்கள் முன்பு கதறினார் அனிதா. இன்று பல அனிதாக்களின் கனவுகள் கொல்லப்பட்டு வருகின்றன. நாளை நீட் தேர்வு எழுதும் பிஞ்சுகளில் எத்தனை அனிதாக்களோ தெரியவில்லை.
-நீரை மகேந்திரன்