‘பள்ளிக்கு வர வேண்டாம்’… பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு!

 

‘பள்ளிக்கு வர வேண்டாம்’… பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு!

கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் குறைந்ததால் கடந்த 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

‘பள்ளிக்கு வர வேண்டாம்’… பள்ளிக்கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு!

குறிப்பாக, பள்ளி திறந்த முதல் நாளே கடலூரில் ஒரு ஆசிரியைக்கு கொரனோ உறுதியானதும் நாமக்கல்லில் 10ம் வகுப்பு மாணவி கொரோனா உறுதியானதும் பெற்றோர்களை அச்சமடையச் செய்தது. அவர்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் 7 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதும் பேரதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் மூலமாக பிற மாணவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல்வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அறிகுறி இருப்பவர்கள் அருகில் உள்ள மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.