“வாட்ஸ்அப்பை டெலிட் செய்யுங்கள்; வேறு செயலியை பயன்படுத்துங்கள்”

 

“வாட்ஸ்அப்பை டெலிட் செய்யுங்கள்; வேறு செயலியை பயன்படுத்துங்கள்”

வாட்ஸ்அப்பின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், அதில் இணையாதீர்கள்; வேறு செயலியைப் பயன்படுத்துங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபமாக டிஜிட்டல் உலகில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை வாட்ஸ்அப். அந்தளவிற்கு அதன் புதிய அப்டேட் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் செயலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற குரல் எழும் அளவிற்கு பூதாகரமாக வெடித்துள்ளது.

தனியுரிமைக் கொள்கை (privacy policy) மற்றும் பயன்பாட்டு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படுவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளா விட்டால் வாட்ஸ்அப் சேவையைத் தொடர முடியாது எனவும் தனது பயனர்களுக்கு பாப்அப் மெசெஜ் ஒன்றை வாட்ஸ்அப் அனுப்பியது.

“வாட்ஸ்அப்பை டெலிட் செய்யுங்கள்; வேறு செயலியை பயன்படுத்துங்கள்”

அதில் முக்கியமாக பயனர்களின் தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிரப்படும் என்று கூறியதே பயனர்களின் அச்சத்திற்குக் காரணமாக அமைந்தது. இதனால் தங்களது சுய விவரங்கள் வெளியில் கசிந்துவிடும் என எண்ணி மாற்று செயலிகளை நோக்கி ஓட்டம்பிடித்தனர்.

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தும் மக்கள் மத்தியில் இழந்த நன்மதிப்பை மீட்டும் வகையிலும் நீண்ட நெடிய விளக்கத்தை வாட்ஸ்அப் அளித்தது. அதில், பயனர்களின் பர்சனல் மெசெஜ்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்; யாரும் பயம் கொள்ள வேண்டாம் என்று கூறியது. காலில் விழாத குறையாக பயனர்களிடம் கெஞ்சி கொண்டிருந்தது வாட்ஸ்அப்.

“வாட்ஸ்அப்பை டெலிட் செய்யுங்கள்; வேறு செயலியை பயன்படுத்துங்கள்”

இச்சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப்புக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அம்மனுவில், “புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள மக்களின் தனியுரிமை விதியை மீறுகிறது. அரசின் மேற்பார்வை இல்லாமலேயே வாட்ஸ்அப் பயனரின் தகவல்களை மற்றொரு நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்கிறது. எனவே இதனை நாட்டில் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி சஞ்சிவ் சச்தேவா, “வாட்ஸ்அப் ஒரு தனியார் செயலி. வாட்ஸ்அப்பின் விதிமுறைகளுக்கு (terms & conditions) நீங்கள் உடன்படவில்லை என்றால் அதில் இணையாதீர்கள்.

வேறு செயலிகளை உபயோகிங்கள். இதேபோல அனைத்துச் செயலிகளின் விதிமுறைகளையும் படித்துப் பாருங்கள். நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். கூகுள் மேப் கூட உங்களின் அனைத்துத் தரவுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. உங்களால் நம்பமுடிகிறதா?” என்று கூறினார்.

“வாட்ஸ்அப்பை டெலிட் செய்யுங்கள்; வேறு செயலியை பயன்படுத்துங்கள்”

வாட்ஸ்அப், பேஸ்புக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபலும் முகுல் ரோத்கியும், “வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட செய்தி பரிமாற்றங்களை பேஸ்புக் போன்ற மூன்றாம் தர நிறுவனங்களோடு பகிர்வதில்லை. இந்த வழக்கிலுள்ள குற்றச்சாட்ட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவையாக உள்ளன” என்று வாதிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.