உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

 

உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

டெல்லி: உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பயணிகள் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காகவும் மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில், இந்தியாவில் மே 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கவுள்ளதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது.

உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

இதையடுத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்வரும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  • பயணிகள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
  • பயணிகளும், அதிகாரிகளும் விமான நிலையத்தை வந்தடைவதற்கு மாநில அரசுகள் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • மேலும் பயணிகள் தங்களுடைய பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்திற்கு வந்து விட வேண்டும்.
  • கொரோனா பரிசோதனைக்காக பயணிகள் ஆரோக்கிய சேது மொபைல் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கிய சேது ஆப் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த நான்கு மணி நேரத்தில் புறப்படவிருக்கும் விமானங்களின் பயணிகள் மட்டுமே விமான நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தனிநபர் வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட சில டாக்சி வாகனங்கள் மட்டுமே பயணிகள் அல்லது விமான ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும்.
  • உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி அனைத்து விமான நிலைய ஊழியர்களும் சானிடைசர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • லக்கேஜ்களை சுமந்து செல்லும் தள்ளு வண்டிகளுக்கு (ட்ராலி) விமான நிலையத்தில் அனுமதி இல்லை. குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் இதற்கு அனுமதி உண்டு. அப்போதும் கிருமி நாசினி கொண்டு அத்தகைய ட்ராலி தள்ளு வண்டிகள் சுத்தம் செய்யப்படும்.
  • முனைய கட்டிடங்கள் அல்லது ஓய்வறைகளில் செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகைகள் வழங்கப்படாது.
  • அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது இருமல் உள்ள ஊழியர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • விமானங்கள் தரையிறங்கிய பின்பு, பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.