• August
    20
    Tuesday

Main Area

Main



நாய் குரைத்தலும், ஓஷோவும் 

ஓஷோ
ஓஷோ
Loading...

ஒரு முறை ஓஷோவும், ஓர் அமைச்சரும் ஒரே விடுதியில் தங்குவதற்கு நேர்ந்தது. அன்றைய தினத்தின் இரவு நேரத்தில், அந்த விடுதியின் அடுத்தடுத்த அறைகளில் ஓஷோவும் அமைச்சரும் தூங்கப் போனார்கள். அந்த இரவு முழுவதும் விடுதியைச் சுற்றி நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. நாய்கள் குரைப்பதைக் கேட்ட அமைச்சர் வெளியில் வந்து பார்த்தார். ஆறேழு நாய்கள் நின்றிருந்தன. அமைச்சரைப் பார்த்ததும், முன்னிலும் அதிகமாக சப்தம் எழுப்பி குரைக்க ஆர்ம்பித்தன. அமைச்சர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் தொட பயண அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது.

barking dog

நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். நேராக ஓஷோவின் அறைக்குச் சென்ற அமைச்சர், ஓஷோவை கோபத்துடன் எழுப்பினார். 
‘என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?’ என்று புலம்பினார். ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்
‘அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை. கோஷமிடவில்லை. அந்த நாய்களுக்கு இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகைகளைப் படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்’ என்றார்.
‘நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?’  என்றார் அமைச்சர்.

osho

உடனே ஓஷோ, ‘நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை.
ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அது தான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம் தான்!’ என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அமைச்சர். ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர். 
‘ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்’ என்றார் அமைச்சர். 

osho

ஓஷோ நமக்குச் சொல்கிறார், ‘இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத் தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும் போது நீ வெறுப்படைகிறாய்’ என்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.