குமரி அருகே மர்ம விலங்கு கடித்து நாய், கோழிகள் உயிரிழப்பு… பொதுமக்கள் அச்சம்!

 

குமரி அருகே மர்ம விலங்கு கடித்து நாய், கோழிகள் உயிரிழப்பு… பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடுகளில் வளர்த்து வந்த நாய் மற்றும் கோழிகளை மர்ம விலங்கு கடித்துகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு கோவில் தெருவில் வசித்து வருபவர் மனுவேல் (53). இவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் மற்றும் 3 கோழிகள் அதே பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதேபோல், அருகில் உள்ள ராஜதுரை என்பவரது வீட்டில் வளர்த்து வந்த நாய், 9 கோழிகளும் உடலில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தன.

அடுத்தடுத்து 2 வீடுகளில் வளர்த்து வந்த நாய், கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அச்சமடைந்த அந்த பகுதிமக்கள் இதுகுறித்து பூதப்பாண்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், பூதப்பாண்டி வனவர் ரமேஷ், வன காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கோழி மற்றும் நாய்களை ஆய்வுசெய்தனர்.

குமரி அருகே மர்ம விலங்கு கடித்து நாய், கோழிகள் உயிரிழப்பு… பொதுமக்கள் அச்சம்!

அப்போது, நாய் மற்றும் கோழிகளை ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து கொன்று உள்ளதாகவும், அது சிறுத்தையாக இருக்கும்பட்சத்தில் நாய்களை கொன்றுவிட்டு, அதே இடத்தில் விட்டு சென்றிருக்காது என்றும் வனத்துறையினர் கூறினார். எனினும் அந்த மர்ம விலங்கை தேடி வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே, வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை மர்ம விலங்கு கடித்துக்கொன்றதால் அச்சமடைந்துள்ள அந்த பகுதி மக்கள், மீண்டும் அந்த விலங்கு ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதால், அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.