`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

 

`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

திருச்சி மற்றும் பல பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அண்மையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கண்ணன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை முறையாகக் கவனிப்பதில்லை என்று குற்றம்சாட்டி சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில் இன்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. மிகவும் அலட்சியமாக் இருக்கிறார்கள். இவ்விவகாரத்தை அலட்சியமாக கையாளாதீர்கள். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து வருகிறோம். மருத்துவ கழிவுகள் சுகாதரமான முறையில் அழிப்பதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை, பரிசோதனை போன்றவற்றில் சிறு சிறு தவறுகள் நடந்து வருகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறோம். கொரோனா தடுப்பூசி பரிசோதனை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பத்திரிகைகளை பார்த்து தான் அதை நான் தெரிந்து கொண்டேன். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும். இறப்பு விகிதத்தை குறைக்க போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். மக்கள் நோய் குறித்து கவனத்தோடு இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.