புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறாரா குஷ்பு? – சர்ச்சையாகும் ட்விட்!

 

புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறாரா குஷ்பு? – சர்ச்சையாகும் ட்விட்!

புதிய கல்விக் கொள்கை வரைவு சென்ற ஆண்டு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் முன்வைக்கப்பட்டது. அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. நடிகர் சூர்யா கடும் விமர்சனங்களை புதிய கல்விக் கொள்கை வரைவு மீது வைத்தார்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துவருகின்றன. குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இதன் பல அம்சங்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குஷ்பு பதிந்திருக்கும் ஒரு ட்விட் சர்ச்சையாகியுள்ளது.

#NewEducationPolicy2020 A welcome move.

இதுதான் குஷ்பு பதிவிட்ட ட்விட். இதனால் குஷ்பு பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்திருக்கும் ஒரு திட்டத்தை வரவேற்கிறார் என்று பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. இன்னொரு புறம் இந்தத் திட்டத்தில் உள்ள நெகட்டிவ்வான விஷயங்களைப் பட்டியலிடுபவர்களும் உண்டு. இன்னும் சில நடிகர் சூர்யாவின் கருத்துகளைப் பட்டியலிட்டு பின்னூட்டம் இடுகிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநாவாஸ் குஷ்புவின் ட்விட்டைக் கடுமையாக எதிர்த்து பதிவிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை என்ற ‘கல்வி மறுப்புக் கொள்கை’யை வரவேற்கிறார் குஷ்பு. மத்திய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை கூட பாஜக வரவேற்றதில்லை. ஆனால் BJPயின் மோசமான திட்டத்தை காங்கிரஸ்காரரே வரவேற்கிறார். குலக்கல்வியை  ஒழித்த காமராஜரின் கட்சியில் இருந்து கொண்டே, நவீன குலக்கல்விக்கு ஆதரவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்பு பாரதிய ஜனதா கட்சியின் இணையவிருக்கிறார் என்ற செய்தி சமீபகாலமாக அடிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கான முஸ்தீபாக குஷ்பு இந்த ட்விட்டைப் பதிந்துள்ளார். விரைவில் பாஜகவுடன் சேர்ந்துவிடுவார் என்று பலர் தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

இன்னொரு புறம் குஷ்புவின் இந்த ட்விட்டே பகடியாகப் போடப்பட்டிருப்பதாகவும் சிலர் பதிவிடுகிறார்கள். அதாவது புதிய கல்விக் கொள்கை எனும் படத்தை பாஜக ஓட்ட விருக்கிறது என்பதாக பகடியாகவே இந்தப் பதிவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படியோ குஷ்புவின் ஒரு ட்விட் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.