கொரோனவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று அலட்சியம் வேண்டாம்!

 

கொரோனவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று அலட்சியம் வேண்டாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் தீவிர பாதிப்பில் இருந்து மீண்டுவருவது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. நன்றாகப் பேசிக் கொண்டிருந்த மனிதர்கள் திடீரென்று உடல்நிலை மோசமாகி நம்மைவிட்டு மறையும் கொடூரத்தைக் கண்கூட பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நமக்கு கொரோனா வராது என்று அலட்சியமாக வெளியில் நடமாட வேண்டாம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அது சாதாரண காய்ச்சலாக இருக்கும், கொரோனாவாக இருக்காது என்று பரிசோதனை செய்துகொள்ளாமல் இருந்துவிட வேண்டாம். பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால், காய்ச்சல், உடல் வலி 10 நாட்களுக்கு மேலாக உள்ளது. எனவே, கொரோனா நம்மைக் கண்டு பயந்து ஓடியிருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். இப்படி தப்பாக கணித்துக்கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருப்பதுதான் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்குக் காரணமாகிவிடுகிறது.

கொரோனவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று அலட்சியம் வேண்டாம்!

அதே போல், கொரோனா வந்து பாதிப்பு குறைந்து வீட்டில் ஹோம் குவாரன்டைன் இருக்க அனுமதிக்கப்பட்டவர்களும் மாத்திரை மருந்து எடுப்பதில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். டாக்டர்கள் பரிந்துரைத்த நாள் வரை தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மாத்திரை மருந்தை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கும். கொரோனா சிகிச்சை எடுத்த பலருக்கும் மாரடைப்பு வருவதாக பகீர் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே, ஹோம் குவாரன்டைன் எனப்படும் சுய தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு டாக்டரின் ஆலோசனை பெற்று கம்ப்ளீட் பிளட் கவுண்ட் உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. அதனுடன் இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி அவரது ஆலோசனை பெறுவதும் நல்லது.

கொரோனா வந்தவர்கள் D Dimer என்ற ரத்தம் உறைதல் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பரிசோதனை அடிப்படையில் டாக்டர்கள் வழங்கும் ஆஸ்பிரின் போன்ற ரத்தம் உறைதலைத் தடுக்கும் மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில மாதங்களுக்காவது மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது, மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது, நெஞ்சு வலி போன்ற அசௌகரியம் ஏற்பட்டு மறைந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. கொரோன வந்து சென்ற பிறகு சில மாதங்கள் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்!