Home தமிழகம் "ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்" : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

“ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,282ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக – ஏற்கனவே அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், “சிறப்பு அதிகாரிகளை” நியமித்திருப்பதால் மட்டுமே – கொரோனா நோய் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரியவில்லை. இது அதிகாரிகளுக்குள்ளே அதிகாரப் போட்டி, பொறாமை ஆகியவற்றை ஏற்படுத்தவே பயன்படும்.

தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களின் அச்சம் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் – மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும்; உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுவோருக்கு நிவாரணங்களை விரைவுபடுத்த முடியும். நோய்ப் பாதிப்பின் பீதியில் இருக்கும் மக்களிடம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால்தான் நேரடியாக ஆறுதல் கூறி – சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி போன்ற தனி நபர் பாதுகாப்பினைச் செய்து கொள்ள வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி – போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும்.

corona virus

“சிறப்பு அதிகாரிகளை” நியமித்துவிட்டால் – அதிகாரிகள் அடங்கிய பல்வேறு குழுக்களை நியமித்து விட்டால், தன் கடமை முடிந்து விட்டது என்ற மனப்பான்மையில் முதலமைச்சர் செயல்படுவதை ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதிட முடியாது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட “கூட்டு முயற்சி” ஒன்றே இதுபோன்ற நேரத்தில் கை கொடுக்கும்; மக்களின் உயிரைப் பாதுகாக்கும்.

ஜனநாயக ரீதியான அதுபோன்ற “கூட்டு முயற்சிக்கு” தனக்குத்தானே முதலமைச்சர் தடை விதித்துக் கொள்வது, சிறந்த நிர்வாக அணுகுமுறையாக இருக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கும் வலுசேர்க்காது. “கொரானோவோடு வாழப் பழகுவோம்” என்று அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில் – தன் அமைச்சரவை சகாக்கள், மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இதுபோன்ற பேரிடர் நேரத்தில் கூட முதலமைச்சர் நிர்வாக ரீதியாக “வாழப் பழகிக் கொள்ளவில்லை” என்பது கவலையளிக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால்; கொரோனா கால முதலீடுகளை ஈர்க்க தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டிக்கு தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் தலைமை வகித்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட – அந்தக் குழுவில் அவர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டு – நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க, நிதி நிலைமையைச் சீர்படுத்த ஆலோசனைகள் வழங்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநிலத்தின் நிதியமைச்சர் ஒரு உறுப்பினராகக் கூட இடம்பெறவில்லை. இப்படி கொரோனா தடுப்பு நிபுணர் குழு, ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிக்கும் குழு எவற்றிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கூட இடம்பெறவில்லை!

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் திரு. பழனிசாமி, தனது அமைச்சர்களுக்குள்ளேயே “ஒருங்கிணைப்பு” இன்றி – “கொரோனா பற்றிய அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்” என்பது போல் செயல்படுவது – அமைச்சரவைக்கே உரிய கூட்டுப் பொறுப்பு திட்டமிட்டுத் தட்டிக்கழிக்கப்படுவது, ஆபத்தான போக்காகும்.

இந்நிலையில் கொரோனா நோய்த் தடுப்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும், அதிகரித்து வரும் நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும், எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ – அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘ஒரு கை தட்டினால் ஓசை வராது’ என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் புறக்கணிப்பதால், கொரோனா தடுப்பின் தீவிர நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டு – பெருமளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் இந்த நேரத்தில் – மக்களிடம் மிக ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தி, நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணமாக அமைந்து விடும் என்பதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உணர்ந்திட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது – ஏதோ, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க.,வில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

TN Assembly

எனவே, இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திட வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில், மாநில அளவிலிருந்து, நகராட்சி – ஊராட்சி வார்டுகள் வரை, அனைத்துக் கட்சிகளும் அரவணைக்கப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வெகு சிறப்பாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதைப் பார்த்தாவது, மக்களாட்சியின் நெறிமுறைகளை உணர்ந்து, தமிழக முதல்வர் தன்னைத் திருத்திக் கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது!

தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல், ஏதோ ஒரு விசித்திரமான மனப்பான்மையின் காரணமாக ஒதுக்கிவைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், முக்கியத்துவம் தேடிக் கொள்ளவும், முதல்வர் முயற்சி செய்வது, அதுவும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் செய்வது, பேரிடர் மேலாண்மைக்கு ஆக்கபூர்வமான அடையாளம் அல்ல!

எனவே ஜனநாயக ரீதியாக, கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாய் அடித்துக்கொலை… ஊழியர்கள் மீது போலீசில் புகார்…

சென்னை மாங்காடு அருகே தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாயை, ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்வம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை...

மஞ்சுவிரட்டு போட்டியில் ‘மாடு முட்டி’ 2 பேர் மரணம்!

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை...

காதலியை பழிவாங்க 4 முறை தனிமைப்படுத்தி வைத்த சுகாதார அமைச்சக ஊழியர்!

காதலியை பழிவாங்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 4 முறை கொரோனா என்று சொல்லி தனிமைப்படுத்திவைத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்ரேல் நாட்டின்...

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லை!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் இல்லை என தகவல் கிடைத்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
Do NOT follow this link or you will be banned from the site!