“நான் தான் டோக்கன் தருவேன்… எங்கே வேணும்னாலும் புகார் கொடுக்கலாம்” – திமுக பொறுப்பாளர் பேச்சால் சர்ச்சை!

 

“நான் தான் டோக்கன் தருவேன்… எங்கே வேணும்னாலும் புகார் கொடுக்கலாம்” – திமுக பொறுப்பாளர் பேச்சால் சர்ச்சை!

கொரோனா இரண்டாம் அலையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பாதிப்பு படிபடியாக குறைந்து வருகிறது. ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதனால் எப்படியெல்லாம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய முடியும் என்ற தீவிர ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இச்சூழலில் கோவையில் திமுக பொறுப்பாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நான் தான் டோக்கன் தருவேன்… எங்கே வேணும்னாலும் புகார் கொடுக்கலாம்” – திமுக பொறுப்பாளர் பேச்சால் சர்ச்சை!

வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி போடும் மையம் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்காக முந்தைய நாளே டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு டோக்கன் விநியோகம் செய்வதில் தான் தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணம்பட்டி திமுக பொறுப்பாளராக இருப்பவர் அருள்குமார். அப்பகுதி முழுவதும் இவர் தான் தடுப்பூசிக்கான டோக்கன் விநியோகம் செய்கிறார். இவர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதை எதிர்த்து ஒருசிலர் அவரைத் தட்டிக் கேட்டுள்ளனர். அதற்கு மிகக் காட்டமாகப் பேசியுள்ள அவர், “தடுப்பூசிக்கான டோக்கனை நான் தான் தருவேன். எங்கே வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்” என தடாலடியாகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை விமர்சித்துள்ள கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், “இம்மாதிரி பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் தலையீடு அதிகரித்துக்கொண்டுள்ளது . அனைவரும் இணைந்து இக்காலகட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தை சொந்த கட்சியினர் மதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.