திமுக பொதுக்குழு!உள்ளுக்குள் வெடித்த பூகம்பம்!

 

திமுக பொதுக்குழு!உள்ளுக்குள் வெடித்த பூகம்பம்!

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அந்தக் கட்சி நிர்வாகிகள் தேர்வு சுமூகமாக நடைபெற்றதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டாலும், உள்ளுக்குள் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது.
நேற்றைய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வகித்துவரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் மேலும் இருவர்.., பொன்முடியும், அ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Image


திமுகவின் அதிகாரமிக்க இந்த பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள அனைவரும் வெவ்வேறு சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். இதில், ’’ தங்களுக்குக் கொஞ்சமும் வாய்ப்பளிக்கப்படவில்லையே!’’ என்கிற குமுறல் முஸ்லீம்களிடையே வெடிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சியை ஆதரித்து வந்தவர்களில் முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உட்கட்சிப் பூசல்கள், பிளவுகள் போன்ற சோதனையான காலக்கட்டங்களிலும் அவர்கள் திமுக பக்கமே நின்றனர்.
ஆனால் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த சாதிக்பாட்சா பொருளாளராக இருந்ததோடு சரி! அதற்கப்புறம் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட திமுகவில் உயர் பதவி அளிக்கப்படவில்லை.

திமுக பொதுக்குழு!உள்ளுக்குள் வெடித்த பூகம்பம்!


ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒன்றிரண்டு எம்.பி, எம்.எல்.ஏ சீட்களை தருவதோடு சரி. அப்புறம் அனைவருக்கும் வழக்கம்போல ‘இதயத்தில் இடம்’ மட்டுமே. கடந்த எம்.பி தேர்தலில் திமுக சார்பில் ஒரு முஸ்லீமுக்குக் கூட வாய்ப்பு தரப்படவில்லை. அதேநேரம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஜான் என்கிற முஸ்லீமுக்கு ராஜ்யசபா எம்.பி என்கிற வாய்ப்பை வழங்கி அந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்தது அதிமுக. இப்படி திமுக தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது முஸ்லீம்களிடையே தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image


இது பற்றி நம்மிடம் பேசிய திமுவைச் சேர்ந்த முஸ்லீம் நிர்வாகி ஒருவர், ‘’ நாங்கள் திமுகவை உணர்வுபூர்வமாக ஆதரித்தாலும் அந்தக் கட்சித் தலைமை எங்களை கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகிறது. சாதிக்பாட்சாவுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக ஒருத்தருக்குக் கூட முக்கிய பொறுப்பு அளிக்கப்படவில்லை. கட்சிக்காக காலமெல்லாம் உழைத்து அண்மையில் காலமான ரகுமான்கான் கடந்த பல வருடங்களாக ஓரம்கட்டப்பட்டிருந்தார். சிறந்த பேச்சாற்றல் மிக்க அவர் ராஜ்யசபா எம்.பி பதவி தனக்குக் கிடைக்கும் என மனதார நம்பினார். ஆனால் திருச்சி சிவா போன்றவர்களுக்கு மூன்று முறை வழங்கப்பட்ட அந்த வாய்ப்பு ரகுமான்கானுக்கு ஒருமுறை கூட தரப்படவில்லை. இது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

Image


எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேலூர் முகமது சகி, நீலகிரி முபாரக், நெல்லை சித்திக் போன்றவர்களால் அதிகபட்சம் மாவட்டத் துணை செயலாளர், செயலாளர் வரை மட்டுமே போக முடிகிறது. அதைத் தாண்ட முடியவில்லை. தலைமையும் அதை அனுமதிப்பதில்லை
சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசும் திமுகவின் இந்த கபட நாடகத்தை நாங்கள் இப்போது நன்றாக உணரத் தொடங்கிவிட்டோம். எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவோம்’’ என்றார் உறுதியான குரலில்.

திமுக பொதுக்குழு!உள்ளுக்குள் வெடித்த பூகம்பம்!