170 தொகுதிகளில் திமுக… குறைவான தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு! உலாவும் பட்டியல்

 

170 தொகுதிகளில் திமுக… குறைவான தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு! உலாவும் பட்டியல்

சில நாட்களுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் என ஒரு பட்டியல் வெளியானது. அதில் பாஜகவுக்கு 38 தொகுதிகள் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்பது மட்டுமல்லாமல், யார் யார் போட்டியிடுகிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் வரை அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அடுத்த நாளே பாஜக சார்பில் அந்தப் பட்டியலில் இருப்பவை வதந்தி என்றும், பாஜக தரப்பில் அப்படி ஏதும் அறிக்கை வெளியிடப்பட வில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்போது திமுக கூட்டணி குறித்த ஒரு பட்டியல் வாட்ஸப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் இதுவரை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

170 தொகுதிகளில் திமுக… குறைவான தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு! உலாவும் பட்டியல்

திமுகவின் இலக்கு இம்முறை பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அதற்காக அதிக தொகுதிகளில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. வாட்ஸப்பில் உலாவும் அறிக்கையில், காங்கிரஸ்க்கு 27 தொகுதிகளும், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 தொகுதிகள். கொங்கு ஈஸ்வரன் கட்சி, மனித நேய கட்சி, முஸ்லீம் லீக், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள்.

சில நாட்களுக்கு முன் அதிமுக கூட்டணியிலிருந்து தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்குத் தாவினார். அவர் ஏற்கெனவே இருந்து வந்த மனித நேய மக்கள் கட்சியிலிருந்து விலகி, மனிதநேய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் மமகவில் சேர வற்புத்தப்படுகிறது. அவர் இணைய வில்லை என்றால், அவருக்கு ஒரு தொகுதி என்று பேசப்பட்டிருக்கிறதாம்.

170 தொகுதிகளில் திமுக… குறைவான தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு! உலாவும் பட்டியல்

இவை அனைத்தும் போக மீதம் இருக்கும் 170 தொகுதிகளில் திமுக நேரடியாகத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறதாம். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ 200 தொகுதிகள் உதயசூரியன் சின்னம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதனால், மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 6, கொங்கு ஈஸ்வரன் 3, பாரிவேந்தர் கட்சி 3, மமக 3, முஸ்லீம் லீக் 3, தமிமுன் அன்சாரி 1 ஆகிய 25 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

ஆனால், தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இந்தளவுக்கு இறுதிச்செய்யப்பட்ட பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. முதலில் வதந்தியாக வெளிவருவதும் பின் அதுவே செய்தியாக மாறுவதும் நடப்பதுதானே! இந்த விஷயத்தில் என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.