நள்ளிரவில்… வாக்கு இயந்திரங்களுடன் வந்த லாரிகள் : திமுக பரபரப்பு புகார்!

 

நள்ளிரவில்… வாக்கு இயந்திரங்களுடன் வந்த லாரிகள் : திமுக பரபரப்பு புகார்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் குளறுபடி நடப்பதாக புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

நள்ளிரவில்… வாக்கு இயந்திரங்களுடன் வந்த லாரிகள் : திமுக பரபரப்பு புகார்!

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களுடன் நேற்று அதிகாலை லாரி ஒன்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் 5 லாரிகள் இயந்திரங்களுடன் வந்துள்ளன. இதைக் கண்ட திமுகவினர், அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த இயந்திரங்கள் பழுதானவை மற்றும் வாக்குப்பதிவு செய்யப்படாதவை என அலுவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்க மறுத்த திமுகவினர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட தேர்தல் அலுவலர், அவை பழுதான இயந்திரங்கள் தான் என்றும் இயந்திரங்கள் குடோனில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, திமுகவினர் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.