• April
    06
    Monday

Main Area

Mainதிமுக, காங்கிரஸின் ஒட்டுண்ணியாக மாறி புலிகளைக் கொச்சைப்படுத்துகிறது...சீமான் கண்டனம்!

சீமான்
சீமான்

‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக் கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது.

seeman

விடுதலைப்புலிகளை அழித்து முடித்து விட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது என தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.
2014ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகிற வேளையில், ஈழத்தமிழ் மக்களுக்குக் காங்கிரசு துரோகம் இழைத்துவிட்டதாகக்கூறி கூட்டணியைவிட்டு வெளியேறி நாடகமிட்ட திமுக, இன்றைக்குக் காங்கிரசின் ஒட்டுண்ணியாக மாறி புலிகளைக் கொச்சைப்படுத்துகிற வேலையில் இறங்கியிருக்கிறது.  சந்தர்ப்பவாதமும், நயவஞ்சகமும், இனத்துரோகமும் திமுகவுக்கு ஒன்றும் புதிதில்லையே! ஈழத்தில் இறுதிகட்டப்போர் நடைபெற்றபோது கொத்துக்கொத்தாய் தமிழர்கள் அந்நிலத்தில் செத்து விழுந்தபோது ஊடகச்சர்வாதிகாரம் செய்து அதனை மூடி மறைத்தது மறைந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. ஈழப்பேரழிவை எடுத்துரைத்த என் போன்றோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்ததோடு மட்டுமல்லாது, ஈழப்படுகொலையையும் மூடி மறைத்தது திமுக.

sonia and kalaignar

போர் நிறுத்தம் கோரி தம்பி முத்துக்குமார் தொடங்கி 18க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்நிலத்தில் தீக்குளித்து மாண்டபோதும் அவை யாவற்றையும் மறைத்துக் காங்கிரசு அரசின் இனப்படுகொலை நடவடிக்கைக்குப் பக்கபலமாய் இருந்து எம்மினச் சாவை வேடிக்கைப் பார்த்த வரலாற்றுத் துரோகத்தைச் செய்தது திமுக. அத்தகையத் துரோக வரலாறு கொண்ட திமுக எனும் தமிழர் விரோதக்கட்சி, இன்றைக்கு வெட்கமின்றிப் புலிகள் பெயரில் அரசியல் செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.