மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28 ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.
மக்களவையில் நிறைவேறிய வேளாண்துறை சம்பந்தமான 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிராகவே மக்களவை வாக்களித்தது. இருப்பினும் பாஜகவின் பக்கம் பெரும்பான்மையான எம்.பிக்கள் இருப்பதால் இந்த மசோதாக்கள், எதிர்கட்சியின் எதிர்ப்பை மீறி நிறைவேறின. மேலும், மாநிலங்களவையிலும் நேற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.