உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!

 

உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!

திமுக கூட்டணி எந்நேரமும் உடையலாம் என்கிற செய்திதான் தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது ஹாட்- டாபிக் ஆக வலம் வந்துகொண்டிருக்கிறது. மதிமுகவை தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே என பல்வேறு கட்சிகளும் திமுக அணிக்கு முழுக்கு போடுவது பற்றி தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!


திமுக கூட்டணியில் இப்போது அங்கம் வகிக்கும் மதிமுக ஏற்கனவே அந்த கூட்டணியில் பலமுறை ’உள்ளே வெளியே’ ஆட்டம் நடத்தியிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத அந்தக் கட்சி தனது அங்கீகாரத்தை காப்பாற்றிக்கொள்ள வரும் தேர்தலில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. கடந்த வாரம் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தங்களது கட்சியின் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு ஸ்டாலினிடமிருந்து பாசிட்டிவ்வான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வைகோ மிகுந்த அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!


இதுபற்றி மதிமுக தரப்பில் விசாரித்தால்,’’ எங்களது நியாயமான கோரிக்கைக்கு திமுகவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததில் வைகோவுக்கு ரொம்பவே வருத்தம். மற்றவர்கள் ஆட்சியமைக்க ஏணியாக இருக்கும் நாங்கள் எங்கள் கட்சியின் அங்கீகாரத்தையும் காப்பாற்ற வேண்டுமல்லவா! இதை புரிந்துகொள்ளாமல் எங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தினால் எப்படி? முன்பும் இதேபோல எங்களின் கோரிக்கைகளை ஏற்காமல் இழுத்தடித்து, கடைசி நேரத்தில் திமுக கழுத்தறுத்திருக்கிறது. இந்த கசப்பான அனுபவம் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்’’ என்றவர்கள் அண்மையில் நடைபெற்ற வெங்கய்யா நாயுடு, வைகோ சந்திப்பை அர்த்தபுஷ்டியுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!


மதிமுகவை போலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சி இரட்டை இலக்க எண்களிலேயே இடங்கள் தர வேண்டும் என திமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தலைமை இதைக் கொஞ்சமும் காதில் வாங்காதது, திருமா தரப்பை சூடேற்றியிருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்த விசிக மூத்த நிர்வாகி ஒருவர்,’’ நீங்கள் எங்களுக்கு எஜமானராக இருக்க விரும்பலாம். ஆனால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்க விரும்பவில்லையே. அம்பேத்கரின் இந்த வைர வரிகள் இன்றைய கூட்டணி சூழலுக்கும் மிகப் பொருத்தமாக உள்ளது. எங்களது நிலைப்பாடும் இதுதான். இதில் சமரசத்திற்கு இடமேயில்லை. இதனால் ஏற்படும் இழப்பு எங்களை விட திமுகவிற்கே அதிகமாக இருக்கும்’’ என்றார் கொதிப்புடன். மதிமுக, விசிகவில் கேட்கும் இதே மாதிரியான அதிருப்தி குரல், பாரிவேந்தரின் ஐஜேகேவிலும் எதிரொலிக்கிறது.

உடைகிறது திமுக கூட்டணி?- விறுவிறு தகவல்கள்!


சொந்த சின்னம் வைத்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் போன தேர்தலை விட மிகக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதால் அந்த கட்சிகளும் கொதிப்பில் இருக்கின்றன. ’’அதிகாரப்பூர்வமாக திமுக அறிவிக்கும் வரை காத்திருக்கக் கூடாது. முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்’’ என்கிற கலகக் குரல்கள் அந்த கட்சிகளில் வலம்வரத் தொடங்கிவிட்டன. நடப்பவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள்,’’ போன தேர்தலில் இருந்த திமுக கூட்டணி வரும் தேர்தலில் இல்லை. இப்போதைக்கு இதை மட்டும் உறுதியாக கூற முடியும் ’’ என அடித்து சொல்கிறார்கள்.