ராமநாதபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை... கள்ளக்காதலியின் கணவர் வெறிச்செயல்!

 
murder

ராமநாதபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தாவுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோகுலராஜ் (24). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 5 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.கோகுலராஜ், அதே பகுதியில் பனைமட்டையில் இருந்து தூம்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் தனது பெரியப்பா மகன் கோபாலகிருஷ்ணனிடம்(24) பணிபுரிந்து வந்தார். அப்போது, கோபாலகிருஷ்ணனுக்கும், கோகுலராஜின் மனைவி முத்து லெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

ramanathapuram

இதனை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடிகள் வீட்டில் இருந்து வெளியேறி தனியே வசித்து வந்துள்ளனர். பின்னர், இருவரையும் குடும்பத்தினர் சமாதானம் செய்து முத்துலெட்சுமியை கணவர் கோகுலராஜுடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று  கோபாலகிருஷ்ணன், அவரது சகோதரி இசக்கியம்மாள் ஆகியோர் புதுவலசை பகுதியில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோகுல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோபாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். 

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கோபாலகிருஷ்ணனை காப்பாற்ற முயன்ற இசக்கியம்மாளுக்கும் காயம் ஏற்பட்டது. அவரை தேவிப்பட்டினம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கொலையான கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை சம்பவம் குறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கோகுலராஜ் உள்ளிட்ட கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.