ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பலி

 
accident

ஈரோடு கொல்லம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

ஈரோடு சடையம்பாளையம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர் நேற்று முன்தினம் சோலாரில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்வதற்காக  தனது வீட்டில் அருகே இருக்கும் நண்பர் மணிகண்டனை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இருவரும் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்ப வீடு வந்து கொண்டிருந்தனர். மணிகண்டன் மோட்டார் சைக்கிள் ஓட்ட விக்னேஸ்வரன் பின்னால் அமர்ந்து வந்தார். 

erode gh

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த மோகன் (34), தனது நண்பர் சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பிரிவில் மணிகண்டன் திரும்பியபோது, பின்னால் மோகன்  ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பின்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். 

இந்த விபத்தில் விக்னேஸ்வரன், மோகன், சங்கர்  ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.